காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மஹாராஷ்டிரா பக்தர்கள் வழிபாடு
காஞ்சிபுரம்: மஹாராஷ்டிரா மாநிலம், மாண்ட்ரூப் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், மாண்ட்ரூப் கிராம மக்கள், ஆண்டுதோறும் சிறப்பு வாய்ந்த புண்ணிய தலத்திற்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அப்போது, அணையா சுடருடன் கூடிய தீப்பந்தத்தை அங்கிருந்து எடுத்து வந்து, தங்கள் கிராமத்தில் உள்ள தெய்வத்திற்கு சமர்ப்பித்து வழிபடுவர்.
நடப்பாண்டு, மாண்ட்ரூப் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அம்மனை வழிபட்ட பின், அணையா சுடருடன் கூடிய தீபத்தையும் எடுத்துச் சென்றனர். பின், காஞ்சி சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு மராத்தி மொழியிலான ஆன்மிக நுால்களையும், பிரசாதத்தையும் வழங்கி சுவாமிகள் ஆசிர்வதித்தார்.