உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடத்தில் வேகமெடுக்கும் திருப்பணி; புதுப்பொலிவு பெறும் கோவில்கள்!

பல்லடத்தில் வேகமெடுக்கும் திருப்பணி; புதுப்பொலிவு பெறும் கோவில்கள்!

பல்லடம்:  பல்லடத்தில், வேகமெடுக்கும் கோவில் திருப்பணிகள் காரணமாக, பழமையான கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.


பல்லடத்தில், விநாயகர் பாலதண்டபாணி, பொங்காளியம்மன், அருளானந்த ஈஸ்வரர், மாகாளியம்மன், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. இவை, பல நூறு ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட, தொண்மையான கோவில்களாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில்கள், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டன. பக்தர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் கோவிலை குலதெய்வமாக கொண்டு வழிபடும் குறிப்பிட்ட சமூகத்தினரின் தீவிர முயற்சி காரணமாக, பழமையான கோவில்கள் ஒவ்வொன்றாக புதுப்பொலிவு பெற்று வருகின்றன.


முன்னதாக, சமீபத்தில்தான், அங்காளம்மன், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி, பொங்காளி அம்மன், அருளானந்த ஈஸ்வரர் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. தொடர்ந்து, கடைவீதி மாகாளியம்மன் கோவில், விநாயகர் பாலதண்டபாணி கோவில் மற்றும் பனப்பாளையம் காரணப்பெருமாள் கோவில் உள்ளிட்டவற்றிலும் திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. விரைவில் இக்கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், அக்ரஹார வீதி காலிங்க நர்த்தன வேணுகோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில் உட்பட, கிராம பகுதிகளில், அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இதர கோவில்களும் புதுப்பொலிவு பெற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், பழமையான கோவில்கள் பாதுகாக்கப்படுவதுடன், கோவில் வழிபாடுகள், பண்டிகைகள் மற்றும் விழாக்கள் தடையின்றி நடக்கும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !