உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை காவிரி ஆறு புனித துலாக்கட்டத்தில் தர்பணம் செய்ய குவிந்த மக்கள்

மயிலாடுதுறை காவிரி ஆறு புனித துலாக்கட்டத்தில் தர்பணம் செய்ய குவிந்த மக்கள்

மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில், திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகரான ஆறு ஸ்தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். ரிஷப தேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்க சிவபெருமான் அளித்த சாபம் நீங்க, ரிஷபதேவர், இங்கு காவிரியில் நீராடியதாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால், காவிரி துலாக்கட்டம், ரிஷப தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு 16 புண்ணிய தீர்த்தக்கிணறுகள் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. இதனால், இங்கு நீராடுவது புண்ணியமானதாக கருதப்படுகின்றது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர். இதுபோல பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத் துறையிலும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ருத்ரபாதம் அருகிலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !