கூத்தனுார் சரஸ்வதி கோவிலில் நோட்டு, பேனா வைத்து பக்தர்கள் வழிபாடு
திருவாரூர்: சரஸ்வதி பூஜையை, முன்னிட்டு, சரஸ்வதிக்கு என்று தனி ஆலயம் அமைந்துள்ள, கூத்தனுார் மகா சரஸ்வதி அம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்னிந்தியாவிலேயே, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனுார் கிராமத்தில், ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி கோவில் அமைந்துள்ளது. தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்து வழிபட்ட ஊர் என்பதால் இவ்வூருக்கு, கூத்தனூர் என பெயர் வந்தது. பிரசித்தி பெற்ற, இக்கோவிலில், ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை அழைத்து, வந்து அவர்கள் கைகளால் நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வாங்கி, மகா சரஸ்வதி அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். வெண்ணிற பட்டு உடையில், கையில் வீனையுடன் சரஸ்வதி காட்சியளித்தார். தொடர்ந்து நாளை(19ம் தேதி), விஜயதசமி தினத்தில், புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்படும். நெல்மணிகளில், தமிழின் முதல் உயிரெழுத்தான அ என்கிற எழுத்தை எழுத வைத்து வழிபாடு நடத்த, கோவில் நிர்வாகித்தினரர் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.