இன்று சுக்கிரவார பிரதோஷம்: சிவ தரிசனம் செய்ய சுக்கிர யோகத்துடன் சிக்கல்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும்!
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த சிறப்பு வாய்ந்த நாளாகும். ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவது சகல தோஷங்களையும் போக்கும். பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த நேரத்தில் அனைத்து தெய்வங்களும் சிவ தரிசனம் செய்கின்றனர். இன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் சிவபெருமான், நந்தீஸ்வரருக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அவை சிவபெருமானை உடனடியாக சேரும் என்பது நம்பிக்கை. வீட்டில் தீபம் ஏற்றி,ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை மனதார சொல்லி வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேறும்.