கைலாசநாதர் கோவிலில் தேர்: 22ம் தேதி வெள்ளோட்டம்
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு தயாராகியுள்ள 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய திருத்தேர் வரும் 22ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. காரைக்காலின் சிறப்பு 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் கோவில். பாழடைந்த கோவிலின் குளம் 33 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டது. அதே போல் எதிரே உள்ள கைலாச நாதர் கோவிலுக்கு திருத்தேர் இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி பிரமோற்சவ விழாவில் தேர் இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அம்மையார் குளத்தை புனரமைத்த நாஜிம் எம்.எல்.ஏ., திருத்தேர் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதனால் கடந்த 2010ம் ஆண்டு ஆக., மாதம் திருத்தேர் செய்ய இந்து அறநிலையத்துறை ஒப்புதல் வழங்கியது. 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மரத்தேர் செய்யும் பணி துவங்கியது. அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும், பக்தர்கள், உபயதார்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட 30 லட்சம் ரூபாய் நிதி முலம் பணிகள் நடந்து வருகிறது. 4 இரும்பு சக்கரங்கள் தவிர முழுவதும் மரத்தால் செய்த தேர் 18 அடி உயரமும், 15 அடி அகலம் கொண்டது. தேர் சிம்மாசன பீடத்திலிருந்து இருந்து அலங்கார பொருட்கள் பொருத்தும் போது, திருத்தேர் 47 அடி உயரத்திற்கு கம்பீரமாக நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிற்பங்கள்: புதிய திருத்தேரில் காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் சிவபெருமான் திருவிளையாடலை விவரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல், சிம்மாசன பீடத்தை சுற்றி அஷ்ட லட்சுமிகள் திருவுருவங்கள் மரசிற்பங்களாக அமைத்துள்ளனர். திருத்தேர் பணிக் காக முதல்வர் ரங்கசாமி, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்தை வழங்கியுள்ளார். இந்த மரம் தேர் தயாரிக்கும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
22ம் தேதி வெள்ளோட்டம்: கைலாசநாதர் கோவிலுக்கு தயாரிக்கப்பட்டுள்ள திருத்தேர் பணிகள் முழுவதும் முடிந்து தற்போது தயாராக உள்ளது. திருத்தேரின் வெள்ளோட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது. பங்குனி உத்திர பிரமோற்சவ விழாவின் போது மார்ச் 25ம் தேதி தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.