சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
நாமக்கல்: ஒஸக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த தொட்டு அப்ப விழாவில், வீரக்குமார்கள் பங்கேற்று, கத்திபோடும் நிகழ்ச்சி நடத்தினர்.நாமக்கல் அடுத்த ஒஸக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தேவாங்கர் குலத்துக்கு சொந்தமான இக்கோவிலில், ஆண்டு தோறும், தை அமாவாசை அன்று, பெருவிழா (தொட்டு அப்ப) மற்றும் அம்மன் சக்தி நிலை நிறுத்தம் விழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு, 34ம் ஆண்டு பெருவிழா, இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 7.31 மணிக்கு, சண்டிஹோம யாக பூஜை துவங்கியது. மாலை, 4 மணிக்கு, அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல், இரவு, 9 மணிக்கு, சக்தியை உருவாக்கி, அலகு ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று, நாள் முழுவதும், பச்சைமண் குடத்தின் விளிம்பில் பிடி அகன்ற கத்தியின் முனை அலகு நிற்கும் அரும் காட்சியையும், சவுடேஸ்வரி அம்மன் கொலுவிருக்கும் காட்சியையும், ஏராளமான பக்தர்கள் பக்தி பரவத்துடன் கண்டு களித்தனர். காலை, 7 மணிக்கு, விக்னேஸ்வர மற்றும் கோமாதா பூஜை, அம்மனுக்கு மாங்கல்யதாரணம், 7.30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு சக்தி, மதியம், 1.30 மணிக்கு சாமுண்டி அழைப்பும், மாலை, 6.15 மணிக்கு மகாஜோதி தரிசனமும் நடந்தது. விழாவை முன்னிட்டு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரக்குமாரர்கள், கத்திபோடும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.விழாவில், சுற்று வட்டார மற்றும் சேலம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், தேவாங்கர் குலத்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.