உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தி தேரோட்டம்: மாயவரம் மயூரநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஊர் மக்களுக்கு நேரில் அழைப்பு

கல்பாத்தி தேரோட்டம்: மாயவரம் மயூரநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஊர் மக்களுக்கு நேரில் அழைப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் மாயவரம் முறைப்படி ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் புகழ்பெற்ற திருதேரோட்டம், மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு கல்பாத்தி கிராம, கோவில் நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.


கல்பாத்தி தேரோட்டத்தின் தோற்றுவாயாக மாயவரமும், அங்குள்ள புகழ்பெற்ற மயூரநாதசுவாமி கோவிலும் விளங்குகின்றன. கல்பாத்தி அக்ரஹாரத்தில் குடியேறிய முன்னோர்கள் மாயவரம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலிருந்து சென்றவர்கள் என்பது வரலாற்று ரீதியான தொடர்பு. இதன் நினைவாகவே இரு இடங்களிலும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான ஆகம மற்றும் பூஜை முறைகளுடன் தேரோட்ட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பாரம்பரிய பந்தத்தை போற்றும் விதமாக, மயூரநாதசுவாமி கோவிலை வணங்கி தேரோட்ட அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கூட்டுக் கல்பாத்தி திருத்தேரோட்ட பத்திரிகையுடன், சம்பந்தப்பட்ட உப கோவில்களின் திருவிழா அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான கல்பாத்தி தேரோட்டம் நவ. 7 முதல் 17 வரை நடைபெற உள்ளது. மயூரநாதர் கோவிலில் நடைபெற்ற பக்தர்கள் சந்திப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி கோவில், புதிய கல்பாத்தி மந்தக்கரை மகாகணபதி கோவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில் ஆகியவற்றின் நிர்வாகிகள் கிருஷ்ணா, முரளி ராமநாதன், வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் மாயவரம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !