பழநி முருகன் கோயில் லட்டு, அதிரசம் பிரசாதம் விலை மாற்றம்
பழநி: பழநி முருகன் கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன்தினை மாவு, சக்கரைபொங்கல், புளியோதரை போன்ற ஆறு வகையான பிரசாதங்களின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன்தினைமாவு சக்கரைபொங்கல், புளியோதரை பிரசாதங்கள் தனி விற்பனை ஸ்டால் மூலம் கோயில் வெளிப்பிரகாரத்தில் விற்கப்பட்டு வருகிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்து கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நவ.,1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள விலை விவரங்கள் குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பழநி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். பக்தர்கள் பயன்பெறும் வகையில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன்திணைமாவு, சர்க்கரைபொங்கல், புளியோதரை ஆகிய ஆறு வகை பிரசாதங்கள் சுகாதாரமாக தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரசாதம் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பொதுவான திட்டத்தின்படி, ஒரே விற்பனை விலையில் தரமான மூலப்பொருட்களை கொண்டு பிரசாரம் தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் 2026. நவ.,1 முதல் பிரசாத விற்பனை விலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விலை விபரங்கள்: 50 கிராம் எடையுள்ள லட்டு ரூ20. 50 கிராம் எடையுள்ள அதிரசம் ரூ.20. 50 கிராம் எடையுள்ள முறுக்கு ரூ.25. 50 கிராம் எடையுள்ள தேன் தினை மாவு ரூ.15. 150 கிராம் எடையுள்ள சர்க்கரை பொங்கல் ரூ.20. 150 கிராம் எடையுள்ள புளியோதரை ரூ.20." என தெரிவித்துள்ளது.