மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி துணை ஆணையர் கணபதி முருகன் தலைமையில் நடந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இன்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் திவ்யபாரதி, ஜென்னி, ஆய்வர் இசக்கிசெல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட ஒன்பது உண்டியல்கள் , ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 934 ரூபாய் ரொக்கமும், 146.500 கிராம் தங்கம், 209 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சிகள் 5ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.