உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்போர்வை போர்த்திய பனிமலை தலம்: கேதார்நாத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் குவியும் பக்தர்கள்!

வெண்போர்வை போர்த்திய பனிமலை தலம்: கேதார்நாத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் குவியும் பக்தர்கள்!

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேதார்புரி பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியதுபோல் பனியால் மூடப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பாபா கேதார்நாதரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.


பனியால் மூடப்பட்ட இமயமலைச் சிகரங்களும், சுற்றிலும் பரவியுள்ள வெண்மையான பனிப்படலமும் கேதார்நாத் தலத்தின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளன. பனிப்பொழிவு நிலவினாலும், பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் கேதார்நாதரைத் தரிசித்து வருகின்றனர். பனிப்பொழிவு நின்றதும் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரிக்கிறது. மலைப்பாதை வழியாக நடைப்பயணம், குதிரை மற்றும் கோவேறு கழுதைகள், பல்லக்கு, ஹெலிகாப்டர் எனப் பல்வேறு வழிகளில் பக்தர்கள் கேதார்நாத் தலத்தை அடைந்து வருகின்றனர்.


இதுவரை 18.80 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 2026ம் ஆண்டுக்கான கேதார்நாத் யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் 11ம் தேதி குளிர்காலத்தை முன்னிட்டு கோவில் நடை மூடப்பட உள்ளது. இன்னும் 8 நாட்களே யாத்திரை நடைபெற உள்ள நிலையில், இதுவரை 18,80,398 பக்தர்கள் பாபா கேதார்நாதரைத் தரிசனம் செய்துள்ளனர்.


 பாதுகாப்பு ஏற்பாடுகள்: பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தங்குமிடம், உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ருத்ரபிரயாக் காவல்துறையினரும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் யாத்திரை சீராக நடைபெறுவதைக் கண்காணித்து வருகின்றனர்.


காவல்துறை அறிவுரை: கேதார்நாத் பகுதியில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருவதால், யாத்திரை செல்லும் பக்தர்கள் போதுமான குளிர்கால ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுவதுடன், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் கேதார்நாத் தலம் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் நிலையில், யாத்திரை நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !