உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருகே பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உள்ள பென்னகர் கிராமத்தில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதாகர், தனது துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுடன் கள ஆய்வு செய்தார். ஆய்வில், பென்னகரில் இருந்து கருங்குழி செல்லும் சாலை ஓரம் சிறிய பாறையில் பழங்கால பாறை ஓவியம் ஒன்ரை கண்டறிந்தனர். 


இதுகுறித்து முனைவர் சுதாகர் கூறியதாவது. 3 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட இந்த ஓவியத்தில் மனித உருவம் முழுமையாக இடம்பெற்றுள்ளது. ஆதி மனிதர்கள் வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையத் தெரியாத காலத்தில், சிறிய கல்லைக் கொண்டு பாறையின் மேற்பரப்பைத் தேய்த்து உருவாக்கிய ஓவியம் என்பது தெரிகிறது. மனிதன் வேட்டைக்குச் செல்லும் காட்சி இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவரது கையில் கத்தி போன்ற ஆயுதம் உள்ளது. அருகில் ஒரு நாய், அந்த மனிதனைப் பார்த்தவாறு நிற்கும் வகையில் வரையப்பட்டுள்ளது. ஆதிகால மனிதர்கள் வேட்டைக்கு செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்ற பழக்கத்தை இந்த ஓவியம் எடுத்துக்காட்டுகிறது. செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் பாறை ஓவியம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. கோணை ஓவியத்தைவிட பென்னகர் ஓவியம் தெளிவாகவும், அழகாகவும், சிதைவின்றியும் காணப்படுகிறது.  செஞ்சி மலைத்தொடரில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் அதிகம் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பாறையை தேய்த்து உருவாக்கப்பட்ட ஓவியங்கள் பென்னகர், கோணை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு முனைவர் சுதாகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !