திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ் கல்வெட்டு: கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்து தகவல்
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஏற்கனவே மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு, கடந்த, 1889, 1904, 1912 மற்றும் 1916 ஆகிய ஆண்டுகளில், 97 கல்வெட்டுகளை நகல் எடுத்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வெட்டு ஆய்வாளர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி, பல கல்வெட்டு தகவல்களை, நுால்களாக்கி உள்ளார். அதில், தமிழக மன்னர்களான பல்லவ பெருக்கடையார் மகள் சாமவை என்பவர் வெள்ளியால் செய்யப்பட்ட, போகஸ்ரீநிவாசர் உற்சவருக்கு அளித்த வைரம், முத்து, மாணிக்க ஆபரணங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. மேலும், சோழ மன்னர்களான பராந்தகன், சுந்தர சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோரின் ஆட்சி கால கல்வெட்டுகளில், கோவிலில் நடந்த முக்கிய விழாக்கள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு, நாட்டில் உள்ள பழமையான, எழுதப்பட்ட ஆவணங்களை, டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் வகையில், ‘பாரத் ஸ்ரீ’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. அத்திட்டத்தின்கீழ், திருப்பதி கோவிலில் உள்ள, அனைத்து கல்வெட்டுகளையும் நகலெடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான அனுமதியை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவுக்கு வழங்கி உள்ளது. அதன்படி, டிச., 1ம் தேதி முதல், 30க்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள், திருப்பதி கோவிலில் முகாமிட்டு, கல்வெட்டுகளை நகல்எடுக்க உள்ளனர்.
தமிழ் கல்வெட்டு: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் மூன்றாவது பிரகாரத்தின் வடக்கு சுவரில், தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை, சமீபத்தில், மத்திய தொல்லியல் துறையினர் நகல் எடுத்தனர். அதில், விஜயநகர மன்னரான அச்சுத தேவராயரின் ஆட்சி காலத்தில் பொறிக்கப்பட்ட, தமிழ் கல்வெட்டு என்பதும், இதில், கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்த தகவல் உள்ளதும் தெரிய வந்துள்ளது.