உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்கியது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திரு விழா வரும் நவ. 21ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவத்தை இன்று மாலை, 6:45 மணிக்கு மாநில தேவசம் துறை அமைச்சர் முரளீதரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பிரபல பின்னணி பாடகி சித்ரா, குருவாயூர் எம். எல்.ஏ., அக்பர், திருச்சூர் மாவட்ட கலெக்டர் சிகா, குருவாயூர் நகராட்சி தலைவர் சுனிதா பங்கேற்றனர். சங்கீத உற்சவ துணை கமிட்டி உறுப்பினர்கள் வைக்கம் வேணுகோபால், வித்யாதரன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலகோபால், ஷினிஜா, பிரஹமஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப் பாடு, பிரஹமஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, நிர்வாகி ஹரிகோபால் ஆகியோர் பேசினர்.


நிகழ்ச்சியில், மிருதங்க வித்வான் டி. கே. மூர்த்திக்கு, 10 கிராம் எடை கொண்ட மூலவரின் உருவம் பதித்த தங்கப்பதக்கம், 50,001 ரூபாய் ரொக்கம், சான்றிதழ் செம்பை நினைவு விருதாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவரது தலைமையில் சங்கீதக் கச்சேரி நடந்தது. இந்தக் கச்சேரியில் மதுரை சிவ கணேஷ் பாட, அம்பலப்புழா பிரதீப் (வயலின்), கொடுந்திரபுள்ளி பரமேஸ்வரன் (மிருதங்கம்), குமரகம் கணேஷ் கோபால் (கடம்) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். இன்று துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், 15 நாட்கள் நடக்கிறது. இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலை ஞர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !