அயோத்தியில் தீபோத்சவம்: சரயு நதிக்கரையில் பிரம்மாண்ட ஆரத்தி ஒத்திகை நிறைவு!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட ஆரத்திக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நடைபெற்றது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி கூறுகையில், சரயு ஆரத்திக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நிறைவடைந்துவிட்டதாகவும், தீபங்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். நகரின் அலங்காரப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றார். மேலும், இந்த ஆண்டு தீபோத்சவ விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது பெருமைக்குரிய தருணம் என்றும், அவரது வருகையை எதிர்நோக்கி அயோத்தி மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.