திருச்செந்தூர் செல்லும் காவடிகள் குமரியில் பூஜை வைப்பு
இரணியல்: திருச்செந்தூர் மாசி மாத திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காவடி கட்டி செல்வதை யொட்டி நாளை (13ம் தேதி) காவடிகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கடும் விரதம் இருந்து காவடி கட்டி நடைபயணமாக செல்வது வழக்கம். இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி மாத திருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே பக்தர்கள் விரதம் துவக்கினர்.
குமரி மாவட்டத்தில் இரணியல் மேலத்தெரு, கீழத்தெரு, பன்னிகோடு, ஆசாரிமார்தெரு, பட்டாரியர்தெரு, காஞ்சிரவிளை, பூச்சாஸ்தான்விளை, குளச்சல், மங்காரம், புதுக்கடை, தலக்குளம், பெருங்கோடு, கீழவிளை, பாதிரிகோடு, பாசிகுளத்தான்கரை, மேற்குநெய்யூர், திக்கணங்கோடு உள்பட 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து புஷ்பகாவடி, மயில்வேல் காவடி, தேர்காவடி, ஒரே வாகனத்தில், இரண்டு பேர், ஆறுபேர் பறக்கும் காவடி, வேல்காவடி, அக்னிகாவடி, சூரியவேல்காவடி, சர்ப்ப காவடி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காவடிகள் செல்கிறது. காவடி கெட்டி செல்லும் பக்தர்கள் நடைபயணமாக திருச்செந்தூர் புறப்பட்டு செல்கின்றனர். வரும் 16ம் தேதி நடைபெறும் காவடிகட்டு நிகழ்ச்சிக்காக நாளை (13ம் தேதி) காலை காவடிகள் அந்தந்த ஊர்களில் பூஜைக்கு வைக்கப்படுகிறது. 16ம் தேதி காலை காவடிகள் அந்தந்த பகுதி ஊர்களில் பவனி வருகிறது. அப்போது திருக்கண் சார்த்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்று மாலை திருச்செந்தூர் நோக்கி நடைபயணமாக செல்கிறது. பொதுவாக இரணியல், மற்றும் திங்கள்சந்தை உள்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காவடிகள் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோயில் வந்து அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக திருச்செந்தூர் செல்கிறது. இந்த காவடி பவனியை காண சுற்றுவட்டார மக்கள் ஆயிரகணக்கானோர் திரளுகின்றனர். அன்று மாலை 3 மணியில் இருந்து 9மணி வரை திங்கள்சந்தை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது. விழாவையொட்டி, இரணியல், திங்கள்சந்தை பகுதிகளில் பக்தர்களை வரவேற்கும் விதமாக டிஜிட்டல் போர்டுகள் அங்காங்கே அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதே காவடி கெட்டு நிகழ்ச்சிக்கான களை கட்டி வருகிறது.