திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு: 5000 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா நிறைவு விழாவில், 1.50 லட்சத்திற்கும் மேல் திரண்ட பக்தர்கள், 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த 10ம் தேதி தொடங்கியது. தினமும், மூலவருக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, காலை 8:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, தினமும் லட்சார்ச்சனை நடந்தது. சஷ்டியின் நிறைவு நாளான இன்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்க கவசம், தங்க வேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, வழக்கம் போல் மாலை 3:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. பின், மாலை 4:30 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அங்கிருந்து மலர் கூடைகளை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை-ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கையில் ஏந்தி, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு மங்கள வாத்தியத்துடன் கொண்டு வந்தனர். மாலை 5:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, 5,000 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று, கந்த சஷ்டி நிறைவு விழா, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், மலைக்கோவிலில் திரண்டிருந்த 1.50 லட்சம் பக்தர்கள், பொது வழியில் ஐந்து மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதே போல், 100 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், மூன்றரை மணி நேரமும், 250 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கந்தசஷ்டி நிறைவு விழாவில், அமைச்சர்கள் காந்திராஜன், வெங்கட்ரமணன் ஆகியோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், கோவில் நிர்வாகம் சார்பில், 12 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
புஷ்பாஞ்சலி விசேஷம்
முருகனின் ஆறுபடை வீடுகளில், திருத்தணி கோவிலை தவிர்த்து, மீதமுள்ள கோவில்களில் கந்த சஷ்டி நிறைவு நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும்.ஆனால், திருத்தணி கோவிலில், முருகன் சினம் தணிந்து, வள்ளி, தெய்வானையை திருமணம் செய்துகொண்டு சாந்தமுடன் உள்ளதால், சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
வேல் சமர்ப்பிப்பு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு, அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பில், வேல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகன் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை செய்து, பின் வேல் சமர்ப்பிக்கப்பட்டது.