உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமல் வராகீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

தாமல் வராகீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: தாமல் கிராமத்தில் உள்ள, கௌரீஸ்வரி உடனுறை வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நாளை(14ம் தேதி) காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தாமல் கிராமம். இங்கு புகழ்பெற்ற கௌரீஸ்வரி உடனுறை வராகீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வராஹ அவதாரம் எடுத்த பெருமாள், வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோவிலில், கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கோவில் முழுவதும் திருப்பணி மேற்கொள்ள, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. திருத்தணி கோவிலிலிருந்து வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய், அரசு வழங்கிய 15 லட்சம் ரூபாய், பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய 20 லட்சம் ரூபாய், ஆகியவற்றைக் கொண்டு, திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. புதிதாக ஏழு நிலைகள் கொண்ட, 118 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது. சன்னிதிகள் முழுவதும் புதுப்பிக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்து, நாளை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று நவகிரஹ ஹோமம், தன்வந்திரி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, ஆகியவை நடைபெற உள்ளன. நாளை காலை நான்காம் கால யாக பூஜை, மஹாபூர்ணாஹூதி, 8:30 மணிக்கு ராஜகோபுரம் மஹா அபிஷேகம் நடைபெறும். காலை 9:00 மணிக்கு மூலவர் மஹா கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு பரிவாரங்கள் கும்பாபிஷேகம், பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெற உள்ளன. மாலை 6:00 மணிக்கு விசேஷ அலங்காரம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !