உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீப திருநாள் மாவளி செய்யும் பணியில் பனையேறிகள் மும்முரம்

கார்த்திகை தீப திருநாள் மாவளி செய்யும் பணியில் பனையேறிகள் மும்முரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பூரிக்குடிசையில் கார்த்திகை தீப திருநாளுக்குமாவளி செய்யும் பணியில்பனையேறிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத்திருநாள் வரும் 24 ம் தேதிகொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியமான கலாச்சார திருவிழாவாக கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் இல்லங்களிலும்,அலுவலகங்களில் விளக்கு ஏற்றுவது மட்டுமல்லாமல் இரவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாவளி சுழற்றி கார்த்திகை தீப திருவிழாவினை உற்ச்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை பாரம்பரியமாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர் என வரலாறு தெரிவிக்கிறது. பாண்டிச்சேரி,விழுப்புரம், கடலூர் , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இன்றும் அழியாத பாரம்பரியமாக மாவளி சுழற்றுதல் திகழ்கிறது.


கார்த்திகை தீப நாளில் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரங்களில் மாவளி சுற்றுவதன் மூலம் மனதில் இருள் நீங்கி நோய் பினிகள் நீங்குவதாக கருதப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படும் இவ்வழக்கம் நகர் புறங்களில் பலருக்கு தெரியாமல் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் இதை மாற்றும் வகையில் தமிழ்நாடு பனைஏறிகள் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் பனைஏறிகள் சங்க உறுப்பினர்களைக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவளி தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆர்டரின் பேரில் அனுப்பி வருகின்றனர். 


மாவளி என்பது ஆண் பனை மரத்தின் பூக்காம்பு (கூக்கான் ) பகுதியை பறித்து எடுத்து அதனை எரித்து உரலில் இடித்து தூளாக்கி சளித்து எடுத்து அதனை பருத்தி துணியில் கட்டி இளம் பனையின் ஓலை கட்டை பகுதியில் கட்டி உருவாக்கபடுகிறது. கயிற்றில் கட்டப்பட்ட மாவளியில் தீ வைத்து காற்றில் சுழற்றும்போது தீப்பொறிகள் சிதறி அழகிய வானவேடிக்கை போன்ற தோற்றத்தைத் தருவது அனைவரின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கார்த்திகை தீபத்திற்கு சில நாட்களே உள்ளதால் மாவளி செய்து ஒன்று ரூபாய்100க்கு விற்பனை செய்வது மட்டுமல்லாது அதனை மக்கள் தீப நாளில் சுழற்றுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !