உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் கைசிக துவாதசி உற்சவம் கோலாகலம்: அதிகாலையில் உலா வந்த உக்ர சீனிவாச மூர்த்தி

திருப்பதியில் கைசிக துவாதசி உற்சவம் கோலாகலம்: அதிகாலையில் உலா வந்த உக்ர சீனிவாச மூர்த்தி

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.45 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உக்ர சீனிவாச மூர்த்தி மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


உக்ர சீனிவாச மூர்த்தி, வெங்கடத்துறைவர், ஸ்நாபன பேரர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பாக இவர் மாட வீதிகளில் புறப்பாடு காண்பது தனிச்சிறப்பாகும். வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர்கள் தங்க வாசல் அருகே எழுந்தருளினர். அங்கு ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் கைசிக துவாதசி ஆஸ்தானத்தை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கைசிக புராணம் பாராயணம் செய்யப்பட்டது.


கைசிக துவாதசியின் மகிமை: ஸ்ரீவைஷ்ணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்புமிக்க வழிபாட்டு நாட்களில் ஒன்றாக கைசிக துவாதசி கருதப்படுகிறது. புராணங்களின்படி, ஸ்ரீவராகப் பெருமாள் பூதேவிக்குக் கைசிக புராணத்தை எடுத்துரைத்த நாளுடன் இந்த உற்சவத்தின் மகிமை தொடர்புடையது. 82 பாடல்களைக் கொண்ட கைசிக புராணம், இந்த நாளின் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைக்கிறது. கைசிக துவாதசியின் பின்னணியில் நம்பாடுவான் என்ற பக்தரின் கதை இடம்பெறுகிறது. சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்படும் நம்பாடுவான், கைசிக ராகத்தில் இறைவனைப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடச் சென்றார். அப்போது வழியில் பிரம்மராட்சசன் ஒருவன் அவரைத் தடுத்து உணவாக உட்கொள்ளப் போவதாக மிரட்டினான். ஆனால், இறைவனுக்குத் தனது பாடல்களைச் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் வருவதாக நம்பாடுவான் வாக்குறுதி அளித்தார். அதன்படி இறைவனைப் பாடி வழிபட்டுவிட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பிரம்மராட்சசனிடம் திரும்பிச் சென்றார். அவரது ஆழ்ந்த பக்தியையும், சத்தியத்தைக் காப்பாற்றிய உறுதியையும் கண்டு மகிழ்ந்த இறைவன் அவருக்கு மோட்சம் அருளினார் என்பது புராண வரலாறு. இந்த நிகழ்வின் அடிப்படையிலேயே கைசிக துவாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உத்தான துவாதசி என்றும் அழைக்கப்படும் இந்த நாளில், நம்பாடுவானின் பக்தியும் சத்தியத்தின் மகிமையும் நினைவுகூரப்படுகின்றன. இந்த உற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, இணை செயல் அலுவலர் டாக்டர் சரத், தலைமைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !