பழவேரி முருகன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: பழவேரி மலை மீது புதிதாக கட்டப்பட்டுள்ள பழவேல் முருகன் கோவிலில் வரும் 13ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தின் மலை உச்சியின் ஒரு பகுதியில் பாறை கல்லில் தடம் பதிந்த ஒரு சுவடு உள்ளது. அது முருகனின் காலடி சுவடென நம்பிக்கை கொண்ட அப்பகுதியினர், கார்த்திகை மாதம், கிருத்திகை நாளில் தீபவிளக்கு ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
கிருத்திகை தீப விளக்கு ஏற்றும் அப்பகுதியில் முருகனுக்கு கோவில் கட்டி வழிபட பழவேரி மக்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, கடந்த 2024 தைப்பூசம் நாளில் பூமி பூஜையுடன் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. விமான கோபுரத்துடன் மண்டபம் கட்டப்பட்டுள்ள நிலையில், தரைதளம் அமைத்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
பணிகளை முடித்து வரும் 13ம் தேதி பழவேல் முருகன் கோவிலுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 11ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் யாகசாலை மற்றும் கலச பூஜைகள் நடைபெற உள்ளன.