உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களின் வாகன ஓட்டுனர்களுக்கு ‘சுக்கு காபி’ கேரள போலீசார் துவக்கி வைப்பு

சபரிமலை பக்தர்களின் வாகன ஓட்டுனர்களுக்கு ‘சுக்கு காபி’ கேரள போலீசார் துவக்கி வைப்பு

பாலக்காடு: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களுக்குச் சூடான சுக்கு காபி வழங்கும் சிறப்புத் திட்டத்தைக் கேரள காவல்துறை தொடங்கியுள்ளது.


கேரள –- தமிழக மாநில எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இந்த இலவச சுக்கு காபி விநியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இரவு நேரங்களில் நீண்ட தூரம் வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் தூக்கத்தால் விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத் தடுக்கும் விதமாக, ஓட்டுநர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்து விபத்துகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தட்சிண பாரத் ஆர்ட்ஸ் -ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல் அண்ட் எஜுகேஷன் புரொமோஷன் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்புடன் இணைந்து காவல்துறை இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் காவல்துறையினர், ஓட்டுநர்களுக்குச் சுக்கு காபி வழங்குவதோடு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மண்டல - மகரவிளக்கு சீசன் முடியும் வரை இச்சேவை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதோடு, மக்களின் உயிர்காக்கும் இத்தகைய அக்கறையான முயற்சிக்குப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க விழாவில், பாலக்காடு மாவட்ட எஸ்.பி. அப்துல் ரஷீத், ஏ.எஸ்.பி. சந்தோஷ், டி.எஸ்.பி-க்கள் சந்தோஷ்குமார், சசிதரன், (புதுச்சேரி) கசபா இன்ஸ்பெக்டர் ராஜீவ், வாளையார் எஸ்.ஐ. ஹேமலதா, அமைப்பின் புரவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் சுனிதா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !