உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்: மாலை மகாதீபம்

பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்: மாலை மகாதீபம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை சாயரட்சை பூஜையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று(நவ., 24) மாலை 6:00 மணிக்கு மகாதீபம், சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.


இக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.,18ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பரணி தீபத்தையொட்டி மாலை 5:30 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, யாகசாலை தீபாராதனைகள் நடந்தது. பின் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு சாயரட்சை பூஜையில் மூலவர் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் நான்கு திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.


தொடர்ந்து சண்முகர் தீபாராதனை, சின்னக்குமார சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, திருவாசகம் பாராயணம் நடந்தது. இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலுக்குள் மதியம் 2:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவர். மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.


பின் கோயிலின் நான்கு திசைகளில் தீபம் ஏற்றம் நடந்து, மாலை 6:00 மணிக்கு மலை மீது தீபஸ்தம்பத்தில் மஹாகார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்பின் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது. தங்கரத புறப்பாடு இன்று நடக்காது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் ‘கந்தனே உனை மறவேனே’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, முருகன் பிள்ளைத்தமிழ் பாராயணம் நடக்கிறது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !