உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோவில் செல்ல தடை விதிப்புக்கு எதிர்ப்பு: வனத்துறை நடவடிக்கையால் ஆவேசம்

மலைக்கோவில் செல்ல தடை விதிப்புக்கு எதிர்ப்பு: வனத்துறை நடவடிக்கையால் ஆவேசம்

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம் அங்கலக்குறிச்சி அருகே, அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து, 5ஆயிரம் அடி உயரத்தில் தாடகை நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்குகிறது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு செய்ய அதிகளவு வந்து செல்வர்.

கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன், கனமழை காரணமாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடந்தாண்டு மலையேறி அம்மனை தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், நேற்று வனத்துறையினர் திடீரென தடை விதித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அதில், யானைகள் குட்டிகளுடன் அதிகமாக நடமாடுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த ஹிந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்கள் கூறுகையில், ‘அங்கலக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு, ராமர் வந்து சென்றதற்காக ராமர் பாதம் உள்ளது. சித்தர்கள் தவம் பண்ண இடமாக போற்றப்படுகிறது. இங்கு மகாதீபம் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனக்கூறுவது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து, வனத்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்றனர்.

ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சந்தோஷ், தலைவர் ரவி, கோட்ட செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், பொள்ளாச்சி சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தாடகை நாச்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் மலை மேல் ஏற்றியும், வழிபாடுகளும் செய்துள்ளோம். நடப்பாண்டு வனவிலங்குகளை காரணம் காட்டி வழிபாட்டு உரிமைக்கு தடை விதித்துள்ளனர். எனவே, அந்த தடையை உடனடியாக நீக்கி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அனுமதிக்காவிட்டால், பக்தர்களை திரட்டி பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளை சந்தித்து, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதி மக்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை,’ என்றனர்.


தடை விதித்தால் தகர்ப்போம்!

ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் ரமணன் கூறியதாவது:

தாடகை நாச்சியம்மன் கோவில் மலைப்பகுதியில் கார்த்திகை தீப திருநாளையொட்டி, பக்தர்கள் பாரம்பரியமாக மகாதீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். நடப்பாண்டு அனுமதி இல்லை என்பதை ஏற்க முடியாது.

தாடகை நாச்சியம்மன் மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு செய்ய அனுமதி வழங்கவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

அனுமதி வழங்காத சூழலில், அதற்கான சட்டப்பூர்வ காரணங்களையும், எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இறை நம்பிக்கையை தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. தடை விதித்தால் தடைகளை தகர்ப்போம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !