திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் நிறைவடையுமா?
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றான இக் கோயில் பழமையும், புராணப் பெருமையும் கொண்டது. இக்கோயிலில் மூலவராக அ காளமேகப் பெருமாளும், மோகனவல்லித் தாயாருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. மேலும், இக்கோயிலில் பதினாறு திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். பாண்டிய மன்னர்கள் காலத்து வரலாற்றுச் சிறப்புகளையும், பழமையான கட்டிடக்கலை அம்சங்களையும் கொண்ட இக்கோயிலுக்கு மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2009 நவம்பர் மாதம் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற ராஜகோபுரம், விமானங்கள் மண்டபங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதியதாக வசந்த மண்டபம் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் என அதிக பொருள் செலவில் இப்பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் திருப்பணிகளை மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்பாக உள்ளது.