உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பம்பையில் ஆடைகளை வீசினால் 5000 அபராதம்; அரசின் முடிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஒப்புதல்

சபரிமலை பம்பையில் ஆடைகளை வீசினால் 5000 அபராதம்; அரசின் முடிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஒப்புதல்

சபரிமலை: பம்பை நதியில் ஆடைகளை வீசினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் கேரளஅரசின் முடிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.


கேரள மாநிலம் சபரிமலை பயணத்தில் புண்ணிய நதியாக கருதப்படும் பம்பையில் ஏராளமான பக்தர்கள் குளித்த பின்னர் தங்கள் ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்கின்றனர். இது மிகப் பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு ஆற்றுநீரை வேகமாக மாசுபட செய்கிறது. எனவே பம்பை நதியில் ஆடைகளை விட்டுச் செல்ல வேண்டாம் என்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்த பின்னரும் பக்தர்கள் திருந்திய பாடில்லை. எனவே இந்த சீசனில் கேரளா அரசு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் பம்பை நதியில் ஆடைகளை வீசினால் அந்த பக்தருக்கு உடனடி அபராதம் ஐந்தாயிரம் ரூபாய் விதிக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. இதற்கான உத்தரவை சபரிமலை கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திலீப் பிறப்பித்தார். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163 - வது பிரிவின்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை எதிர்த்து சிலர் கேரளா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, பம்பை ஆறு மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் கூடுதல் மாஜிஸ்திரேட் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. பம்பை நதியின் தூய்மையை பாதுகாக்கவும், கழிவு மேலாண்மையை சீரமைக்கமும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் பம்பை ஆற்றில் வீசப்படும் பழைய துணிகளை சேகரித்து அவற்றை கிளீன் கேரளா நிறுவனத்திடம் ஒப்படைப்பற்கான ஏற்பாடுகள் குறித்து தேவசம்போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடுத்த விசாரணை டிச., 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !