பக்தியுடன் இறைவனை காதலிப்பதே மோட்சத்துக்கான வழி
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
அவ்வகையில், நேற்று ‘கடவுளும் – காதலும்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் துணை தலைவர் மோகன்ராஜ் பேசியதாவது:
ஒரு மனிதன் தனது பக்தியின் மூலம் தெய்வத்திடம் அன்பு செலுத்துகிறான். இறைவன் மீது பற்றுள்ள ஆன்மிக அடியார்கள், 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பல ஆன்மிக தொண்டர்கள், இறைவனிடம் அன்பு செலுத்தி முக்தி பெற்றனர்.
கடவுளும், காதலும் ஆன்மிகத்தில் மிகவும் ஆழமானது. இறைவனை அடைவதற்கான துாய்மையான தத்துவமாக இது விளங்குகிறது. உளவியல் ரீதியாக இறைவனுக்கும், நமது ஆன்மாவுக்கும் இடையே இருக்கும் உறவே பக்தி. இறைவனையே நாயகன் அல்லது நாயகியாக பாவித்து அன்பு செலுத்துவது பக்தி நெறியாகும்.
இன்றைய குழந்தைகளுக்கு இறைவழிபாடு குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். பக்தியை வளர்க்க முதலில் பொறுமை வேண்டும். ஆன்மிகப் பற்றாளர்கள் மூலம் பக்தியை வளர்க்க வேண்டும். ‘உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்’ என்று திருமூலர் கூறியுள்ளார்.
இறைவன் நமது உள்ளத்தில்தான் வாழ்கிறான். நமக்குள் வாழும் இறைவனை உணர, முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே இருக்கும் சிவன் நம்மை நோக்கி வருவான். இறைவன் குறித்து தினமும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.