உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டியே கிடக்கும் திரவுபதியம்மன் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

பூட்டியே கிடக்கும் திரவுபதியம்மன் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பூட்டி கிடக்கும் திரவுபதியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தில்பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் இந்த ஒரு கோவில் மட்டுமே உள்ளது. இக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பல ஆண்டாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், இருதரப்பினரும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் கடந்த 2019 ம் ஆண்டு பல லட்சம் செலவில் கோவிலை புணரமைத்து கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. அதன் பின், மீண்டும் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், கோவிலை கடந்த 2022ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோவிலை அறநிலையத்துறை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்ததிலிருந்து கோவிலை திறந்து சரிவர பூஜைகள் நடைபெறாமல், கோவில் பூட்டியே கிடக்கிறது. தற்போது கார்த்திகை மாத சோமவார பூஜைக்காவது கோவிலை திறந்து பூஜைகள் நடக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 23ம் தேதி கோவில் திறக்காததால், முதல் சோமவார பூஜை நடைபெறவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த உள்ளூர் பக்தர்கள், கோவிலின் வெளியே உள்ள கொடிமரத்தின் முன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து,பிரசாதங்கள் வழங்கி விட்டு சென்றனர். நேற்ற முன்தினம் சொக்கபானை ஏற்றும் போதும் கோவில் பூட்டியே கிடந்தது. பல லட்சம் செலவு செய்து கும்பாபிேஷகம் செய்யப்பட்ட கோவில் பூட்டியே கிடப்பதாலும், சுவாமிகளுக்கு நித்தியபடி பூஜைகள் நடக்காதது பெரும் குறையாக கிராம மக்கள் புலம்பி வருகின்றனர். எனவே, பூட்டி கிடக்கும் கோவிலை திறந்து பூஜைகள் செய்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !