உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து தமிழகத்தின் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து தமிழகத்தின் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

தமிழகக் கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட மூன்று பழமையான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சிலைகளை, இந்தியத் தொல்லியல் துறை (ASI) டெல்லியில் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. டெல்லியில் உள்ள தரோஹர் பவனில் நவம்பர் 26-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் யதுபீர் சிங் ராவத் மற்றும் அதிகாரிகள் இந்தச் சிலைகளை முறைப்படி ஒப்படைத்தனர்.


மீட்கப்பட்ட மூன்று சிலைகள் .. சுந்தரர் - பரவை நாச்சியார்


விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 16-ம் நூற்றாண்டு வெண்கலச் சிலை இது. கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் உள்ள ஸ்ரீ நரீஸ்வரர் சிவன் கோயிலில் இந்தச் சிலை 1956-ம் ஆண்டு புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்துக்குச் சென்ற இந்தச் சிலை தற்போது மீட்கப்பட்டுள்ளது.


கண்ணப்ப நாயனார்


நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சோழர் கால வெண்கலச் சிலை இது. மூன்று வளைவுகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் கண்ணப்ப நாயனார், தனது வலது கையை கண்ணை நோக்கி உயர்த்திய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இருந்து இந்தச் சிலை மீட்கப்பட்டுள்ளது.


சோமாஸ்கந்தர் (சிவன் - உமையம்மை)


சிவன், உமையம்மை இணைந்த சோமாஸ்கந்தர் திருவுருவமான இந்த வெண்கலச் சிலை, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலச் சிற்பமாகும். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூரில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் சிவன் கோயிலில் 1959-ம் ஆண்டு இந்தச் சிலை புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்தியாவின் பழமையான கலைப் பொருட்கள் மற்றும் கோயில் சிலைகளை மீண்டும் தாயகத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்த மீட்பு நடவடிக்கை முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறை, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பாரம்பரியச் சின்னங்களை அடையாளம் காணுதல், மீட்டெடுத்தல் மற்றும் அவற்றை உரிய இடங்களுக்குத் திரும்பக் கொண்டுவருதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !