உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் இந்நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுவோம்; பாஜ அழைப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் இந்நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுவோம்; பாஜ அழைப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 


அவரது அறிக்கை; திருப்பரங்குன்றத்தின் மலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முருக பக்தர்களின் வாழ்நாள் கனவையும், வழிபாட்டு உரிமையையும் சட்டத்தின் துணையுடன் மீட்டெடுத்துள்ளோம். சிறுபான்மையினரின் ஓட்டுக்காக திருப்பரங்குன்ற மலையை சிக்கந்தர் மலையாக மாற்றி, ஹிந்துக்களின் மத அடையாளங்களை அழிக்க முயன்ற அரசியல் தீயசக்திகளின் கூட்டுச்சதியை தர்மத்தின் துணையுடன் முறியடித்துள்ளோம். 


பாரம்பரி வழக்கப்படி, தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று, கடந்த 20ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல், முருக பக்தர்களின் மத உணர்வுகளை தவெக புண்படுத்தியுள்ளது. இன்று திருப்பரங்குன்ற தீபத்தூணில் ஜெகஜோதியாக ஒளிரப்போகிறது கார்த்திகை தீபம். ஒளிரப்போவது தீபமல்ல. முருக பக்தர்களின் வெற்றிச்சுடர், ஆன்மீகத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளால் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த தீபத்தூண் இன்று பிரகாசிக்கப் போவதை கொண்டாடும் விதமாகவும், இரும்புக்கரம் கொண்டு நீதியை நிலைநாட்டியுள்ள நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இன்று மாலை நமது இல்லங்களில் மாக்கோலம் இட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவோம்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !