உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம்: கும்பகோணம் சக்கரபாணி, ஆதிவராக பெருமாள் கோவில்களில் மாசிமக பெருவிழா, கருட கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விரு கோவில்களிலும் மாசிமகம் பிரம்மோற்சவம், பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மூலவர், உற்சவர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், பிரபந்த சாற்றுமுறை, வேத பாராயணம் நடந்தது. பின்னர் உற்சவர் மூர்த்திகள் ராஜ அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளினர்.கோவில் கொடி மரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, காலை, 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட கொடி ஏற்றப்பட்டது. கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன், வர்த்தக சங்க தலைவர் சேகர், அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், தொழிலதிபர்கள் வாசுதேவன், வெங்கடேசன், சுதர்சனன் உட்பட ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.விழா நாட்களில் சந்திர பிரபை, ஆதிசேஷன், ஓலை சப்பரம் கருட சேவை, அனுமந்தன், யானை போன்ற பல வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. வரும், 25ம் தேதி விஜயவல்லி, சுதர்சனவள்ளி தாயார் சமேதரராக, சக்கரபாணி ஸ்வாமி தேரில் எழுந்தருளுகிறார். காலை, 7 மணிக்கு மேல், 7.15 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நடக்கிறது. 27ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !