பொட்டல்புதூர் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் கோலாகலம்!
ஆழ்வார்குறிச்சி: பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் சந்தனக் கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு கந்தூரி விழா கொடியேற்றம் கடந்த 11ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழூர் ஜமாத் நிறைபிறை கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தீன் ஒலி முழங்க நடந்தது.தொடர்ந்து 20ம் தேதி பச்சை களை ஊர்வலமும்நேற்று முன்தினம் காலை எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாத் 10ம் இரவு கொடி ஊர்வலமும் மாலை 6மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இரவு 10 மணிக்கு மேளதாளம் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 5மணிக்கு பள்ளிவாசல் வந்தடைந்தது. சந்தனக்கூடு வந்தவுடன் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடந்தது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணிகளை அம்பை டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர். ஏற்பாடுகளை பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல்கள் முகம்மது ரபி, சம்சுதின் மற்றும் கமிட்டியினர், பள்ளிவாசல் பணியாளர்கள் செய்திருந்தனர்.