கிடப்பில் தேவிபட்டினம் நவபாஷான நடைபாதை!
ADDED :4609 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷான நடைபாதை பணி பாதியில் உள்ளதால், பக்தர்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர். தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவக்கிரகம் அமைந்துள்ளது. தர்ப்பணம், முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தோஷம் விலக, குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி உள்ளிட்ட காரியங்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் தமிழகம் மட்டுமின்றி வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்துசெல்கின்றனர்.நவக்கிரகம் தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிசெய்யும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. துவங்கிய வேகத்தில்,பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் செங்கல், ஜல்லி, தட்டோடுகள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளன. பக்தர்களின் கால்களை பதம்பார்த்து வருகின்றன. இந்த அவதியை போக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.