திருமலையில் பாதுகாப்பு தீவிரம்!
நகரி: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக வரும், திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரபலமான கோவில்களில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, மத்திய அரசின் உளவுத்துறை எச்சரித்தது.இதையடுத்து, திருமலை கோவிலில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாக, திருமலைக்கு செல்லும் வாகனங்களை, போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். திருமலையில், கருடாத்ரி நகர், பாபாவிநாசனம் சுங்கச் சாவடி, ஸ்ரீவாரிபாதம் சிலாதோரணம் போன்ற இடங்களிலும், வாகன சோதனைகள் நடக்கின்றன. திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார், கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி மேற்பார்வையில், ஏராளமான போலீசார், திருமலை மாடவீதி உள்பட, பல இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.