மயிலத்தில் பங்குனி உத்திர பெருவிழா இன்று துவக்கம்
மயிலம்: மயிலத்தில் பங்குனி உத்திரப் பெரு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெரு விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி கிராம தேவதையான மயிலியம்மனை மலைக் கோவிலிருந்து அழைத்துச் சென்றனர். கீழ்மயிலத்தில் மயிலியம்மனுக்கு தினசரி வழிபாடுகள் நடந்தது. கடந்த 15ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பின்னர், நேற்று மலைக் கோவிலை அம்மன் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து நேற்று கிருத்திகை உற்சவம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சுவாமி கிரிவல வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. காலை 11 மணிக்கு வெள்ளி விமான உற்சவம், இரவு விநாயகர் வழிபாடும் நடக்கிறது. வரும் 22ம் தேதி இரவு தங்கமயில் வாகன உற்சவமும், 23ம் தேதி இரவு வெள்ளி யானை உற்வமும், 25ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமிக்கு திருக் கல்யாண உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், 27ம் தேதி காலை தீர்த்த வாரி உற்சமும், இரவு மயிலம் அக்கினி குளத்தில் தெப்பல் உற்சவமும், 28ம் தேதி முத்துப் பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் மலைவலக் காட்சியும் நடக்கிறது. இறுதியாக 29ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.