பஞ்சாமிர்தம் தயாரிக்க பழநியில் குவிந்துள்ள வாழைப்பழங்கள்!
பழநி: பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்கள் டன் கணக்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விளைச்சல் குறைவு காரணமாக விலை அதிகம் விற்கப்படுகிறது. பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு பல்வேறு வெளியூர்களிலிருந்து, பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். குழுவாக வருபவர்கள் தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரித்து அவரவருக்கு தேவையானவற்றை பிரசாதமாக பகிர்ந்துகொள்வர். பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவையானவைகளில் முக்கியமானது வாழைப்பழம். இந்தாண்டு கர்நாடக மாநில குடகு மலைப்பழம், கேரளா வயநாடு, பாச்சலூர், கொடைக்கானல் வடகவுஞ்சி, பெருமாள்மலை ஆகியப்பகுதிகளில் இருந்து பழங்கள் பழநிக்கு விற்பனைக்கு வந்துள்ளன. விளைச்சல் குறைந்த காரணத்தினால் ஒரு பழம் ரூ. 3 முதல் 8 வரை விற்கப்படுகிறது. தைப்பூச திருவிழா 150 டன் வாழைப்பழங்கள் விற்பனையானது. தற்போது 200 டன் வரை கொள்முதல் செய்துள்ளனர்.வியாபாரி முகமது அலிப் கூறுகையில்; பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க, மலை வாழைப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். வாழைப்பழம் விளைச்சல் குறைவு காரணமாக விலை கூடுதலாக உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.