அரவான்!
பாண்டவர்களின் வெற்றிச் செல்வனுக்கு ஒரு திருவிழா!
பாண்டவர்களுக்கும் துரியோதனர்களின் கூட்டத்தாருக்கும் போர் என்பது தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றியைப் பெற காரணமாகத் திகழ்ந்தவன் அரவான் என்று மகாபாரதம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் களப்பலியானதால்தான் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள் என்பது புராண வரலாறு! பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கிருஷ்ணர் பலயுக்திகளைக் கையாண்டார், பாண்வர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனிடம், பாண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற என்ன வழி? எனக் கேட்கிறார். சகாதேவனும், ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, போர் ஆரம்பிப்பதற்குரிய நாளைக் குறிப்பிட்டுச் சொன்னதுடன், சாமுத்ரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி உறுதி என்றான். சகாதேவன் குறிப்பிட்ட லட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன். அர்ச்சுனன் அவனது மகன் நாக கன்னிக்குப் பிறந்த அரவான் ஆகிய மூன்று பேரே. அர்ச்சுனன் இல்லேயேல் போர் இல்லை. கண்ணன் இல்லையேல் வருங்காலமே இல்லை. மிஞ்சியிருப்பது அரவான். எனவே, அரவானைச் சந்தித்தார் கண்ணன். அரவானிடம் பாண்டவர்களின் நிலையைச் சொன்னார் கண்ணன். கண்ணன் சொல்வதை ஒரு வேண்டுகோளாக ஏற்றான் அரவான் களப்பலிக்கு தயார் என்று சம்மதித்தான். தன் தியாகத்தால் நீதி நிலைக்கும். தர்மம் வெல்லும், போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டும் என்பதால் முழு மனதுடன் சம்மதித்தான்.
அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தான். திருமணமாகாதவன் நான். பெண் சுகம் என்றால் என்ன என்று அறியாதவன். ஆகவே என்னை யாராவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவருடன் ஓரிரவாவது குடும்பஸ்தனாக வாழ வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்குப் போர் முடியும் வரை போரில் நடைபெறும் காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம், ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? போருக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அரவானுக்கு எப்படித் திருமணம் நடத்த முடியும்? எந்தப் பெண் இதற்கு சம்மதிப்பாள்? கண்ணன் ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு அரவானிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ கந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு.
அதோ அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை, அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஓர் அழகிய பெண் எழிலாக நடந்து சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்தான் அரவான், அவளை அன்புடன் நெருங்கினான். அங்கேயே மாளிகை முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்து கொண்டான். அரவானின் ஆசை நிறைவேறியது அரவான் காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணன், தன் மாய சக்தியால் ஓர் அழகியை உருவாக்கி அனுப்பினார் என்றும் கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படியிருந்தாலும், அரவான் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, நீராடி தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயார் ஆனான். முறைப்படி அரவான் களப்பலி ஆனான். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்தினருக்கும் போர் ஆரம்பமாயிற்று. குரு சேத்திரத்தில் பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினை அரவானின் தலை கண்டு களித்தது.
இந்த நிகழ்வுகளில் ஒன்றான அரவான் களப்பலியான நிகழ்வினை நினைவூட்டும் வகையில் சித்திரை மாதம் பவுர்ணமியை ஒட்டி விழுப்புரம் அருகில் உள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் சில கிராமங்களில் அரவானுக்கு சிறிய கோயில்கள் உள்ளன. அக்கோயில்களில் அரவானின் தலை மட்டும் கதைவடிவில் இருப்பதைக் காணலாம். அந்த வகையில் விழுப்புரம் அருகில் உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் அரவான் கோயில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. கூவாகம் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் சித்திரைப் பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு இந்தியாவில் உள்ள திருநங்கையர்(அரவாணிகள்) ஒன்று கூடுகிறார்கள். பாரதப் போரில் களப்பலியான அரவான்தான் தங்கள் மானசீகமான கணவன் என்றும், களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறி, அரவானை மணந்தது கண்ணன்தான் என்றும், தாங்கள் கண்ணனின் வாரிசுகள் என்றும் நம்புகிறார்கள்.
பவுர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் சன்னதிக்கு முன், மணப்பெண் போல் ஒவ்வொரு திருநங்கையும் அலங்கரித்து நிற்க, அந்தக் கோயில் பூசாரி, ஒவ்வொருவருக்கும் அரவான் சார்பாக தாலி கட்டுவார். அன்றிரவு திருவிழா களைகட்டும். ஆட்டமும் பாட்டடும் கொண்டாட்டமும் திருவிழாவில் நடைபெறும். மறுநாள் தேர்த்திருவிழா அரவான் களப்பலியான நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும் முதல் நாள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்தெறிந்துவிட்டு வெள்ளைப் புடவைக் கட்டிக் கொண்டு சோகமாகக் காணப்படுவார்கள். சிலர் ஒப்பாரிப் பாட்டுப் பாடுவார்கள். இந்த விழாவினை ஒட்டி, கூத்தாண்டவர் கோயிலில் தனியாக அமைந்திருக்கும் மேடையில் அழகிப் போட்டிகள் நடைபெறுவது உண்டு. இதில் திருநங்கையர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். முதல் பரிசு பெறும் அரவாணிக்கு (திருநங்கை) மிஸ் கூவாகம் என்ற பட்டமும் வழங்குவார்கள். பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை போர் முடியும்வரை உயிருடனிருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு களித்தான், பாண்டவர்கள் வெற்றி பெற்றதும் கண்ணபிரான், அரவானை உயிர்ப்பித்தார் என்றும் புராணம் கூறுகிறது. விழுப்புரத்தில் கூவாகம் கிராமத்தில் நடைபெறும் திருநங்கையர்களுக்கான இந்த விழா சந்தோஷமாக ஆரம்பமாகி பிறகு சோகத்தில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த விழாவின் கடைசி நாளில் தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறும் அதற்குப்பின் திருநங்கையர்கள் வழக்கம்போல் நாகரீகமாக ஆடை அணிகலன்கள் அணிந்து கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.