பெரியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா
சத்தியமங்கலம்: பெரியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திராளான பக்தர்கள் தீ மிதித்தனர். சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் அருகே உள்ளது பெரியூர். இங்குள்ள மாகாளியம்மன் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் குண்டம் விழா நேற்று காலை, ஐந்து மணிக்கு துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை ஐந்து மணிக்கு கோவிலுக்கு முன் உள்ள அறுபதடி குண்டத்தில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். இவரை அடுத்து பக்தர்கள் வரிசையாக தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் வேப்பிலையுடன் மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி ஈரத்துணியுடன் குண்டம் இறங்கினர். குண்டம் விழாவை முன்னிட்டு மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் துரைசாமி தலைமையில் ஐந்து ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.