உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகர்களை அரசு ஊழியராக்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை!

அர்ச்சகர்களை அரசு ஊழியராக்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை!

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர், நிவேதனப் படையல்கள் தயாரிப்போர், பூசாரி, பகல், இரவு காவலர்கள், பணிப்பெண் உள்ளிட்ட, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, கிராம கோவில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 13ம் தேதியிலிருந்து, 25ம் தேதி வரை, தமிழகம் முழுக்க, சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். பின், நிறைவு விழாவின் போது, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்: கோவில் பணியாளர்கள் அனைவரையும், அரசின் அடிப்படை ஊழியராக்க வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும்; கோவிலில், ஆகமம் பயின்று, 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில், வீடு இல்லாத அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில், பயன்பெற, வழிவகை செய்து தர வேண்டும். கோவிலில் பணிபுரியும், அர்ச்சகர்கள் உள்ளிட்ட, பணியாளர்கள் அனைவருக்கும், பணிப்பதிவேடு பராமரித்து, குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அரசு துறைகளைச் சேர்ந்த, ஊழியர் சங்கங்களை அழைத்து, குறை கேட்பது மற்றும் துறைரீதியான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு கிராம கோவில் பணியாளர்கள் சங்கத்திற்கு, அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த, கலைஞர்கள், அரசு ஊழியர்கள், வல்லுனர்களுக்கு, அரசு விருது வழங்கி கவுரவிப்பது போல், ஆகமம் பயின்று கோவில்களில், 25 ஆண்டுகளாக, பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளை விருது வழங்கி, கவுரவிக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !