உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலை சின்னங்களை காண வசதியாக மாமல்லபுரத்தில் பாதை சீரமைப்பு!

கலை சின்னங்களை காண வசதியாக மாமல்லபுரத்தில் பாதை சீரமைப்பு!

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், குன்று பகுதியில் உள்ள கலைச்சின்னங்களுக்கு பயணிகள் எளிதாக செல்ல, நடைபாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மையப் பகுதியில் உள்ள, நீளமான குன்றின் கிழக்கு விளிம்பில், அர்ச்சுனன் தபசு பாரம்பரிய சின்னம், மேற்கு விளிம்பில், குடைவரை மண்டபம், மேற்பரப்பில் ராயர் கோபுரம் ஆகியவை அமைந்துள்ளன. இதன் அருகே, கணேச ரதம், திருமூர்த்தி மண்டபம் மற்றும் சுற்றுப்புற குன்றுகளில், வெண்ணெய் உருண்டை பாறை, குடைவரை மண்டபங்கள் ஆகியவைகள் அமைந்துள்ளன.இவற்றில், அர்ச்சுனன் தபசு மட்டும், பிரதான சாலை அருகே அமைந்துள்ள நிலையில், மற்றவை அனைத்தும் உட்புறமாக அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குன்று பகுதிகளுக்கு எளிதாக செல்ல, பல ஆண்டுகளுக்கு முன், செம்மண் பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில், இப்பாதையில், கற்கள் பெயர்ந்து, கரடுமுரடாக மாறி சீரழிந்தது. இதனால், இப்பகுதிகளுக்கு செல்ல, பயணிகள் சிரமப்பட்டனர்.இந்நிலையில், இப்பகுதியை பராமரித்து வரும், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை பயணிகள் நலன் கருதி, கணேச ரத பகுதியிலிருந்து குன்று பகுதிகளுக்கு செல்லும், பல்வேறு கிளை பாதைகளை, சீரமைத்துள்ளது. பாரம்பரிய தன்மைக்கேற்ப, இருபுறமும் கருங்கல் தடுப்பு, அதன் இடைவெளியில் செம்மண் நிரப்பி, இப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைச்சின்னங்களை பார்வையிட, பயணிகள் சிரமமின்றி நடந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !