உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இசையுடன் பக்தி வளர்த்த சுவாதித் திருநாள் மன்னர்!

இசையுடன் பக்தி வளர்த்த சுவாதித் திருநாள் மன்னர்!

நல்ல இசையைக் கேட்கும்போது, மனம் சாந்தியடைகிறது. அத்தகைய தெய்வீக இசையை நாதயோகம்- நாத உபாசனை என்பர், விதவிதமான ராகங்கள் மனதில் பலவிதமாக உணர்வுகளைத் தரும். சங்கீத நாட்டமுடையவனே அதை ரசிக்க முடியும்.  ரிக், யஜுர், சாம அதர்வணம் என்று வேதங்கள் நான்கு. அதேபோன்று ஆயுர்வேதம், தனுர்வேதம், சிற்பவேதம், காந்தர்வ வேதம் நான்கும் உபவேதங்களாகும். காந்தர்வ வேதமே இயல், இசை, வேதம். கண்ணனின் வேணுநாதமே கோபிகைகள் கண்ணனை நாடச் செய்தன. ஜீவாத்மாக்களை பரமனை நாடச் செய்கிறது நாதம். இசை என்பது இறைவனோடு கலந்தது. இறை உணர்வுடன் கலந்தது.

தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரை சங்கீத மும்மணிகள் என்போம். இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவர், சங்கிதத்துக்கு புத்துயிர் கொடுத்தவர் கேரள நாட்டு சுவாதித் திருநாள் மகாராஜா. வைத்தீஸ்வரர், தேவி முருகன் அருளால் பங்குனி மாத கிருத்திகையில் பிறந்தவர். முத்துசாமி தீட்சிதர் (1775-1834) தியாகராஜர் (1767-1847) ராமர் அருளால் சித்திரை மாத பூசத்தில் பிறந்தவர். சியாமா சாஸ்திரி என்று பிரசித்தி பெற்ற வெங்கடசுப்பிரமணியம் (1762-1827) வேங்கடேசர் அருளால் சித்திரை மாத கிருத்திகையில் பிறந்தவர். பிறந்தாலே முக்தி என்னும் திருவாரூர் தியாகராஜ ÷க்ஷத்திரத்தில் இம்மூவரும் பிறந்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அதே சித்திரை மாத சுவாதி நட்சத்திரத்தில் பத்மநாபன் அருளால் பிறந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா இவருக்கு ராமவர்மா என்னும் பெயர் இருந்த போதும் பிறந்த நட்சத்திரத்தையே பெயராகக் கொள்வது அவர்கள் மரபு. ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர் போன்று 35 வயது வரையே வாழ்ந்து, அரச பதவியையும் வகித்து, சங்கீத கலாநிதியாகவும் திகழ்ந்தவர். சுவாதித் திருநாள் இவரது காலம் 16-4-1813 முதல் 25-12-1848 வரை. 2013 ல் அவரது 200 ஆவது வருட ஜெயந்தி வருவதால், அவரது சங்கீத ஈடுபாட்டைப் பற்றி சிறிது காண்போம்.

1810 ல் ராஜா பலராமவர்மா அஸ்வதி திருநாள் காலமானதும், இருபது வயதேயான கவுரி லக்ஷ்மிபாய் ஆயில்ய திருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். உடன்பிறந்த பார்வதிபாயும் நிர்வாகித்தல் துணைபுரிந்தார். பாண்டித்யம் மிக்க சங்கராச்சேரி ராஜவர்ம தம்பிரான் என்பவர் லக்ஷ்மியின் கரம் பற்றினார். அவர்களது முதல் வாரிசாக ருக்மணிபாய் பிறந்தாள். தம்பதிகள் அரசு செழிக்க வேண்டி அனந்த பத்மநாதனைத் துதித்திட பரந்தாமன் அருளால் சித்திரை சுவாதியில் உதித்தவர்தான் ராமவர்மா. பிறந்த நான்காம் மாதமே குழந்தைக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பதினாறு வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். நாட்டு மக்களின் மேன்மையுடன், கல்வி, கேள்வி, சங்கீதம், நாட்டியம், ஓவியம் போன்ற வற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். கீர்த்தனைகள் பல புனைந்தார். சுவாதித் திருநாள் அரசருக்கு மலையாளமும் சமஸ்கிருதமும் கொச்சுப்பிள்ளை வாரியார் மூலம் கற்பிக்கப்பட்டது. அப்போது இந்தியா ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததால், மலையாள நாட்டுக்கு மன்றோ துரை திவானாக இருந்தார். அதனால் தஞ்சாவூர் சுப்பய்யர் மூலம் ஆங்கிலமும் கற்றார். தவிரவும் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராட்டி, இந்தி, பார்சி மொழிகளையும் செவ்வனே கற்றார், போராஜனுக்கு காளிதாசன் வாய்த்ததுபோல், சுவாதித் திருநாளுக்கு கரமனை சுப்ரமண்ய பாகவதர், ஸ்ரீரங்கம் நாடகரத்னம், தஞ்சாவூர் பிச்சுபாகவதர் போன்றோர் அமைந்தனர்.

ஆக, குலசேகர ஆழ்வார் வம்சம். நாட்டுச் சீர் திருத்த நலன்களுடன் இயல், இசை, நாடகத்திலும் சிறந்து விளங்கியதில் வியப்பில்லை.

வடநாடு, தென்னாடு என பேதமில்லாமல்- மொழிவெறியின்றி சங்கீதத்தை வளர்த்தார். பல மொழிகளில், கர்நாடக-ஹிந்துஸ்தானி ராகங்களில் இசையமைத்த பெருமை சுவாதித் திருநாள் அரசருக்குண்டு தனது நாட்டைவிட்டுச் செல்லாமல், பிற பிரதேசத்தைச் சேர்ந்த இசை வல்லுநர்களை அழைத்து, தானும் கற்று கலையை வளர்த்தவர் சுவாதித் திருநாள்.

அப்போது தஞ்சையில் மகாராஷ்டிர சிவாஜி குடும்பத்தினர் அரசு நடத்தியதால் துகாராம், நாமதேவர், ஞானதேவர் போன்ற பக்த கவிகளில் இசை வைபவங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஹரிகதா பாணி சிறந்தது. இந்த நிலையில் தஞ்சை மேரு சுவாமி என்பவரை திருவனந்தபுரத்துக்கு அழைத்து குருவாக ஏற்றார் ராஜா. அவர்மூலம் சுவாதித் திருநாள் குசேல உபாக்யானம் அஜாமிள உபாக்யானம் போன்றவற்றை கதகளிக்காக ஹரிகதா பாணியில் இயற்றிப் பரவினார்.

தியாகராஜரின் பாடல்கள் தெலுங்கில்தான் அதிகம். ராமரைப் பற்றிய பாடல்கள் அநேகம். அவற்றில் அவர் பெயரும் திகழும். மத்யம காலத்தில் இருக்கும், புரந்தரதாசர் பாடல்கள் புரந்தர என்ற முத்திரை அடியுடன் திகழும். கன்னடப் பாடல்களே அதிகம். முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் ஊர் ஊராகச் சென்று அவ்வூர் தெய்வங்களைப் பற்றி பாடியவை. பெரும்பாலானவை வடமொழியில் அமைந்தவை. குருகுஹ என்ற முத்திரையுடன், விளம்ப காலத்தில் இருக்கும், சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள். ஸ்யாம கிருஷ்ண சவுத்ரி என்ற முத்திரையுடன், மிச்ர ஜாதியில் அமைந்தவை. தேவிகளைப் பற்றியதாக அமைந்தவை இவரது பாடல்கள்.

சுவாதித் திருநாள் மன்னருடைய கிருதிகள் நானூறுக்கும் மேற்பட்டவை. வடமொழியில் இயற்றப்பட்டவையே அதிகம். பத்மநாபதாசனாகி, பத்மநாப ஸரஸிஜநாய என்ற முத்திரை அடியுடன் அமைந்தவை. சங்கீத மும்மணிகளையும் தம்முள் உணர்ந்து நான்காமவராகவே திகழ்ந்தார். ராகம், லயம், பக்தி, பாவம் ஆகியவற்றை சிறப்பாகக் கையாண்டார்.

நடனக் கலையில் ஆர்வம் கொண்ட அவர், முத்துசாமி தீட்சிதரின் நட்டுவனார் வடிவேலுவின் ஆதரவால், தாமே பதங்களும் பதவர்ணங்களும் படைத்து நடனக்கலை மெருகேறச் செய்துள்ளார். கேரள மோகினி யாட்டத்தின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கியவர் சுவாதித் திருநாள் அரசரே.

த்ருபதம், கயால், டுமரி, டப்பா, கஜல் போன்ற நாற்பதுக்கும் மேலான ஹிந்துஸ்தானி பாடல்களை புலமையோடு பாடியுள்ளார். அப்பாடல்களில் புலமையோடு பாடியுள்ளார். அப்பாடல்களில் துளசிதாசரின் தாசபாவம், மீராபாயின் மாதுர்ய பாவம் போன்றவை மிளிர, பாமரனும் பாடியனுபவிக்கும்படி தகுந்த ராகங்களில் அமைந்துள்ளார்.

அவரது கீர்த்தனங்கள் நவராத்திரி கீர்த்தனங்கள், கன ராக கீர்த்தனங்கள், மத்யம கால கீர்த்தனங்கள் என விரிவடையும் அவர் அதிகமாகக் கையாண்ட ராகங்கள் சங்கரா பரணம், தோடி, கர்மபோதி, பைரவி, கல்யாணி என்றபோதும் சாரங்கதம், பிலஹரி, லலித பஞ்சமம் த்விஜாபந்தி, கோபிகாய சந்தம், கண்ட போன்ற அபூர்வ ராகங்களிலும் பாடியுள்ளார்.

பத்மநாபர் சந்நிதியில் நவராத்திரி விழா நடக்கும்போது பாடுவதற்கான இயற்றப்பட்டவையே நவராத்திரி  கீர்த்தனங்கள். தினமும் தோஷ மங்களம் பரிபாஹி கணபதி பாடிய பிறகு, ஒவ்வொரு நாளும் எந்தப் பாடல் எந்த ராகத்தில் பாடவேண்டுமென நிரல்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி, கோயிலில் அன்றாடம் வாசிக்கும் நாதஸ்வர இசைக்கும்கூட எந்த நேரத்தில், எந்தப் பாட்டை, என்ன ராகத்தில் வாசிக்க வேண்டுமென நிர்ணயித்துள்ளார். விழாக் காலங்களில் சுவாமி புறப்பாடுக்குக்கூட பலவகை கீர்த்தனைங்களை முறைப்படியாக அமைத்துள்ளார். சுவாதித் திருநாள் மன்னர்.

ஸ்வரணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸத்யம் ஆத்மநிவேதனம் என்று பிரகலாதன் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியபடி, இவரது நவரத்தினமாலை எனும் ஒன்பது பாடல்கள் பக்தி மார்க்கத்தின் வெவ்வேறு உத்திகள் என்பதைக் காட்டும். ஒவ்வொரு மார்க்கத்துக்கும் ஒரு பாடல் வீதம், தனித்தனி ராகத்தில் ஒன்பது உத்தியாகச் செய்தாலும், முடிவில் பக்தியானது அத்வைத ஆனந்த ரஸமயத்தில் லயித்துவிடும் என்பதை உணர்ந்தவர் சுவாதித் திருநாள்.

பத்மநாபரைப் பற்றி பக்தி சதகம் என்னும் நூறு துதிகள் இயற்றியுள்ளார். பாகம் ஒன்றுக்கு நூறு துதிகள் வீதம் பத்து பாகங்கள் கொண்ட பக்தி மஞ்சரியையும் இயற்றியுள்ளார். ஆதிசங்கரரின் சவுந்தர்ய லகரி, சிவானந்த லகரி மற்றும் நாராயண பட்டத்ரியின் நாராயணீயத்தைப் போன்று, பத்மநாபனின லீலா, குண, சவுந்தர்ய ரசங்கள் அனுபவிக்கும் துதிகள் இப்படைப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஆக, சுவாதித் திருநாளின் படைப்புகள் யாவும் கங்கை, யமுனையுடன் அந்தர்வாகினியாய் ஒடும். சரஸ்வதியைப்போல் இயல் இசையோடு பக்திப் பரவசமாய் மிளிர்கிறது. பக்தி மஞ்சரியின் திரிவேணியில் நீராடுபவர்கள் இதனை உணர்வர். இவரது மற்றொரு முக்கிய படைப்பு ஸ்வானந்தூபுர வர்ணன பிரபந்தம். திருவனந்தபுர தல வரலாறு கூறும் இந்நூல் ராமாயண சம்பூ போன்று சம்பூ நடையில் விளங்குகிறது. பத்து அத்தியாயங்களிலமைந்த இந்நூலில், பத்மநாப சுவாமி ஆலயத் தோற்றம், ஐதீகம். ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள், ஆராட்டு, லட்சதீபம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

இவரது படைப்பில் ராகமாலிகைப் பாடல்களும் உண்டு. பாவயாமி ரகுராமம் என்னும் பாடலை இவர் சாவேரி ராகத்தில் மட்டும் பாடினாலும், செம்மங்குடி சீனிவாச ஐயர் அதனை ராகமாலிகையாக்கி விட்டார். கமல ஜாஸ்ய உத்ருத் என்ற பாடலில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை ராகமாலிகையாக அமைத்தார் சுவாதித் திருநாள். மகுட ஸ்வரப் பிரயோகம் என்ற முறையில் முதல் ராகத்தின் இறுதியை சிறிது திருப்பினால் அடுத்த ராகம் தொடரும். இவர் 21 வர்ணங்கள் பாடியுள்ளார் ராக, பாவ, ஸ்வர லட்சணங்களில் தேர்ச்சி பெற்றவரே வர்ணம் பாட முடியும். இவரது 21 வர்ணங்களில் ஆறு வர்ணங்கள் இறையுணர்வு கொண்டவை; மற்றவை சிருங்கார உணர்வு கொண்டவை.

மலையாளத்தில் 50, வடமொழியில் 10, தெலுங்கில் 5 என அவர் எழுதிய பதங்கள் 65. சிவன் பிரதோஷ காலத்தில் ஆடும் நடனத்திற் கொப்ப சங்கராபரணத்தில் ந்ருத்யதி  ந்ருத்யதி என்ற கீர்த்தனையும் ஐந்து தில்லானாக்களும் இயற்றியுள்ளார்.  ஆங்கிலேய ரெஸிடெண்ட் கல்லன் துரை, சுவாதி மன்னரது ஆட்சி நிர்வாகத்தில் குறுக்கிட்டதால் மனம் நொந்தார் சுவாதித் திருநாள். உள்ளம் தேய உடலும் தேய்ந்தது. மன்னர் தன் உடலுக்கு சிகிச்சை செய்ய அனுமதிக்க வில்லை. தானுண்டு தன் செயலுண்டு என தம் அறையிலே அடங்கிக் கிடந்து 25-12-1848 ல் தம் பூத உடலை நீத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !