உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைத்ர கவுரி விரதம் ஆரம்பம்!

சைத்ர கவுரி விரதம் ஆரம்பம்!

பங்குனி வளர்பிறை திரிதியை முதல் ஏப்ரல் வளர்பிறை திரிதியை அதாவது அட்சய திரிதியை  வரை: தெலுங்கு புதுவருடப் பிறப்பான யுகாதியின் போது, கவுரியம்மனை பூஜிக்கும் காலகட்டமாக பெண்கள் கொண்டாடுவர். நமக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லையாயினும், புனிதம் மிக்க இந்நாட்களில் நாமும் கவுரியை துதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். எளிமையாக செய்யும் சைத்ர கவுரி விரதத்தினை நாமும் அனுஷ்டித்து, சவுபாக்யம் பெறலாம். இது யுகாதிக்கு மறுநாளுக்கு மறுநாள் அதாவது த்ரிதியை அன்று தொடங்கி அட்சய திரிதியை வரை நடக்கும்.

பூஜை அலமாரி முன் கோலமிட்டு, ஒரு பலகையிலும் கோலமிட்டு, அதன் மேல் ஒரு தாம்பாளம் வைத்து அதில் கவுரியை ஆவாகனம் செய்ய வேண்டும். மணலால் கவுரி செய்து வைப்பார்கள். முகம் உள்ளவர்கள் அதையும் வைத்து, சங்கிலி, தோடு, மூக்குத்தி என அலங்காரம் செய்து, வஸ்திரம்(புடவை) கட்டி, புஷ்பம் கொண்டு அலங்கரிக்கலாம். அதன் முன், வெற்றிலையில் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைத்து, முதலில் பிள்ளையாருக்கு பூஜை செய்து, பிறகு கவுரிமாரியம்மனுக்கு (அம்மனுக்குரிய அஷ்டோத்திரம் கூறி) பூஜை செய்ய வேண்டும். தீபம், தூபம், நைவேத்தியம் அருகில் இன்னொரு சிறிய தாம்பாளத்தில், ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, வளையல், குங்குமம், மை டப்பா, போன்ற மங்கலப் பொருட்களையும் வைக்க வேண்டும். கஜ வஸ்திரம் எனப்படும் பஞ்சுமாலை முக்கியமாக அம்மனுக்கு அணிவிக்க வேண்டும்.

நடுவில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் சுமங்கலிகளை அழைத்து தாம்பூலம் அளிக்கலாம். ஆனால் பூஜை, எளிய நைவேத்தியம் தினமும் உண்டு. இடையில் ஒரு நாள் சுமங்கலிகளை அழைத்து நம் சக்திக்கு ஏற்றாற்போல தேங்காய், பழம் வெற்றிலை பாக்குடன், முதல்நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டிய முழுப்பயறு அல்லது கொண்டைக்கடலையும், குடிப்பதற்கு பாலோ அல்லது குளிர் பானமோ கொடுக்க வேண்டும். சிலர் கேசரி போன்ற இனிப்புகளையும் கொடுப்பர்.  இது நம் பெண் பிறந்த வீட்டிற்கு வருவது போல, எனவே சித்திரான்னங்கள் செய்து, அம்பாளுக்கும் நைவேத்தியம் செய்து, பெண்களை அழைத்து சாப்பாடு போடலாம். அட்சய திருதியை அன்று அம்பாளுக்கு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, பூஜை முடிந்தபின் தயிர் சாதத்தை சிறு துணியில், ஒரு ஸ்பூன் சாதத்தை மூட்டை போல் கட்டி அம்பாளுக்கு அருகில் வைத்து அம்பாளை சிறிது நகர்த்தி வைத்து விட்டு, மறுநாள் மணலில் செய்த கவுரியானால் நீரில் கரைத்து விசர்ஜனம் செய்யலாம். அம்பாளுக்கு சாற்றிய கஜ வஸ்த்திரத்தில் உள்ள பஞ்சை சிறிது எடுத்து, தங்கள் மாங்கல்யத்தில் சுற்றிக் கொள்வர். தீர்க்க சவுமாங்கல்யத்துக்காகவும் அம்மனை நம் பெண் போல் பாவித்து வீட்டிற்கு அழைப்பது என்றும் கூறப்படும் பூஜை இது. குறிப்பாக மகாராஷ்டிரர்கள் செய்யும் மிக முக்கிய பூஜைகளில் இதுவும் ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !