உலகிற்கு பயன்படும் வகையில் வாழ வேண்டும்!
மதுரை: நமக்கு கிடைத்த வாழ்வை, உலகிற்கும் பயன்படும் வகையில் வாழ வேண்டும், என, மாதா அமிர்தானந்தமயி பேசினார். மதுரை, பசுமலை மாதா அமிர்தானந்தமயி மடம், பிரமஸ்தான கோயிலில் நடந்த தோஷ நிவர்த்தி பூஜைக்கு பின், அவர் பேசியதாவது: மனித வாழ்க்கை இரைச்சலாக மாறி வருகிறது. அன்பு எனும் மையத்தில் இருந்து, நாம் விலகிச் செல்வதே இதற்கு காரணம். வெறும் சொற்கள், கூட்டங்களை மட்டும் உருவாக்கும்; அன்பு நிறைந்த குடும்பத்தை உருவாக்காது. ஒவ்வொருவரும் உடலாலும், மனதாலும் பிரிந்து, அன்பில் இருந்து விலகி, தொடர்பு இன்றி தீவுகளாக மாறி வருகின்றனர். அன்பு எனும் அச்சில்தான், உலகம் சுழல்கிறது; இதிலிருந்து விலகினால், உலகம் அழிந்து விடும். மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் எல்லாம், ஒற்றுமை எனும் செய்தியை வழங்குகின்றன. நாளைய உலகை வழிநடத்தும் இளைஞர்கள், போதை, காமம், பணத்தாசையில் இருந்து, விடுதலை பெற வேண்டும். இந்த மூன்றில் ஒன்று இருந்தாலே, மனதின் சமநிலை கெடும். பள்ளிகளில், தொண்டு செய்யும் நாள் என்ற திட்டம், முன்பு இருந்தது; மீண்டும் துவங்கினால், நன்றாக இருக்கும். ஒவ்வொரு மாணவரும், வாரத்தில் இரண்டு வகுப்புகள், அருகில் உள்ள இடங்களை துப்புரவு செய்ய வேண்டும்; மரக்கன்றுகளை நடவேண்டும். நீரையும், மின்சாரத்தையும் பாதுகாக்க, கற்றுத் தர வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகளை "படி... படி என, கட்டாயப்படுத்துவதை போல, உயர்ந்த கோட்பாடுகளை கடைபிடிப்பதற்கும், வளர்ப்பதற்கும் கட்டாயப்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளிடம், "வீராங்கனையாக வளரவேண்டும். யாரும் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இதயத்தின் உறுதி அதிகரிக்க வேண்டும் என, கற்பிக்க வேண்டும். வாழ்வை, நமக்கும், உலகிற்கும் பயன்படும் வகையில் வாழ வேண்டும். கண்களில் கருணை எனும் மை தீட்டலாம்; உதடுகளில் உண்மை எனும் சாயம் பூசலாம்; கைகளில் "பரோபகாரம் எனும் மருதாணியால் அழகு செய்யலாம்; நடத்தையில் பணிவின் இனிமையை சேர்க்கலாம். இதயத்தில் மனிதநேயத்தின், இறைஅன்பின் ஒளியை நிறைத்து, உலகை அழகாக்கலாம். இவ்வாறு, அமிர்நதானந்தமயி பேசினார்.