மழை பெய்ய வேண்டி மக்கள் நூதன வழிபாடு
அரூர்: மழை பெய்ய வேண்டி, கிராம பெண்கள், ஒப்பாரி வைத்து, நூதன முறையில், வழிபாடு நடத்தினர். அரூர் அடுத்த பூக்கடைப்பட்டி கிராமத்தில், மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோவிலில், இரவில் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து, பூஜைகள் செய்து வருகின்றனர். கடந்த, 29ம் தேதி முதல், நாளை வரை, இந்த பூஜை நடக்கிறது. இரவில், வீடு, வீடாக சென்று உணவு சேகரித்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் உணவுகளை வைத்து, 8 மணிக்கு மேல், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மழை வேண்டி, வர்ண பகவானை நினைத்து, ஒப்பாரி பாட்டு பாடுகின்றனர். பின்னர், வீடுகளில் சேகரிக்கப்பட்ட உணவை, அம்மனுக்கு படைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, கோவிவில் கூடிய அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். கடும் வறட்சிக் காலங்களில், இது போன்று வழிபாடு செய்தால், மழை பெய்யும் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.