மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4505 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4505 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4505 days ago
கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது. ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
4505 days ago
4505 days ago
4505 days ago