செல்லியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
நாமக்கல்: மாணத்தி செல்லியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா, இன்று (மே, 7) துவங்குகிறது.நாமக்கல் அடுத்த மாணத்தியில், செல்லியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதம் திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, கடந்த ஏப்ரல், 24ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. விரதம் இருக்கும் பக்தர்கள், கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு, தினமும் மஞ்சள் நீர் ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.இன்று (மே 7), காலை, 7 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு, அம்மன் சக்தி அழைத்தல், வடிசோறு வைத்து படையல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை காலை, 8 மணிக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மனுக்கு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். பகல், 12 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை, 5 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது.மே, 9ம் தேதி காலை, 6 மணிக்கு கிடா வெட்டு, கம்பம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.