உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் என ஊஞ்சல்!

துலாம்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் என ஊஞ்சல்!

வெற்றியே குறிக்கோள் என துடிப்புடன் செயல்படும் துலாம்ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 8ல் சஞ்சரித்த குருபகவான், மே28முதல் பாக்கியஸ்தானமான 9ம்இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன்பார்வையால் 1,3,5 ஆகிய ஸ்தானங்கள் வாயிலாக நன்மையை வாரி வழங்குவார். ஜென்மத்தில் இருக்கும் சனியின் பார்வை 3,7,10 ஆகிய இடங்களில் பதிகிறது. பாரப்பா குருவே தான் இரண்டொடு ஐந்தேழ் பரிவாகும் நவத்தோடு பதினொன்றில் தான் சீரப்பா நின்றபலன் செப்பக்கேளு சிவிகையொடு கரிபரி கல்யாணம் கூடும் நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டி காணும் கூறப்பா சுகமெல்லாம் கொடுக்கும் மெத்த குடும்பமது தான் செழிக்கும் கீர்த்தி ஓங்கும்என்று ஒன்பதாம் இட குரு தரும் நன்மைகளை பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, ஏழரைச்சனியின் கெடுபலனை, குருவின் பார்வைபலம் பெருமளவு குறைத்து விடும். அதாவது, இத்தனை நாள் மனதில் வீசிய வெப்பக்காற்று தணிந்து, மனம் இன்ப ஊஞ்சலாடும். ஆயுள்பலம் அதிகரிக்கும். அதேசமயம், ராகுவால் உடலில் இனம்புரியாத பிரச்னைகள் அவ்வப்போது உண்டாவதை தவிர்க்க முடியாது.பணப்பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். இயன்றவரை சிக்கனத்தைக் கடைபிடித்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டாலும் ராசியைக் குரு பார்ப்பதால் அமைதிக்கான வழி பிறக்கும். பிடிவாதத்தைக் குறைத்துக் கொள்வதும், நிதானமாகப் பேசுவதும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் சில இடைஞ்சல்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிலசமயம் அவர்களுக்கு உதவி செய்து உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளலாம். கவனம்.தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். அவருடன் கருத்துவேறுபாடும் உண்டாகலாம். புதிய மனையோ, வீடோ வாங்க ஏற்ற காலகட்டம் இதுவல்ல. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகமாகும்.குலதெய்வ அருளால் புத்திர பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. பிள்ளைகள் படிப்பில் பின்தங்கலாம். தகுந்த அறிவுரை கூறி அவர்களை வழிப்படுத்த முயற்சிப்பீர்கள். குழந்தைகளின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.ரோக ஸ்தானமாகிய 6ம் வீடான மீனராசியை எந்த கிரகபார்வையும் கிட்டாததால் உடல்நிலையில் அதிருப்தி ஏற்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் தலைகாட்டலாம். சிலருக்கு ஆபரேஷன் போன்ற சிகிச்சையும் செய்ய நேரிடும். ஆனாலும், மனநிலையில் உற்சாகம் நிலைத்திருக்கும் என்பதால் கடமையாற்றுவதில் தொய்வு உண்டாகாது. 7ம் வீடான களஸ்திர ஸ்தானத்தில் சனி,ராகு பார்வை பதிவதால் குருபலம் இருந்த போதும், திருமண முயற்சியில் தடங்கல்களை எதிர்கொள்வீர்கள். கடந்தகாலத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த கருத்துவேறுபாடு மெல்ல மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். மற்றவர்களை தேவையில்லாமல் விமர்சித்து எதிரிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலையுண்டு. இப்பழக்கத்தை விடுப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். சுபநிகழ்ச்சிகளை மனநிறைவாக செய்து முடிப்பீர்கள். தந்தையிடமிருந்த கருத்து வேறுபாடு மறைவதோடு உறவும் பலப்படும். பிதுர்சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி, பாகப்பிரிவினை நடந்தேறும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அனுகூல சூழ்நிலை உருவாகி நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: புதிய தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி, தரத்தின் அளவை அதிகரிப்பீர்கள். நிறுவனத்தின் நற்பெயர் பரவலாகும். பணவரவில் இருந்த தளர்ச்சி நீங்கி மிதமான லாபம் கிடைக்கும். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி பெறுகிற யோகம் உண்டு. நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வெளிநாடு சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி நிறைவேறும்.

வியாபாரிகள்: அதிக மூலதனம் செய்யும் அளவிற்கு ஒரு தொகை கையில் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்து விற்பனையில் முன்பை விட முன்னேற்றம் அடைவீர்கள். லாபமும் பல வகைகளில் நன்மையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். சிலர் புதிய கிளைகள் துவங்க அனுகூலம் உண்டு. புத்திரர்கள் வியாபாரம் செழிக்க தகுந்த ஆலோசனை தந்து, வியாபார நடைமுறையில் உறுதுணை புரிவர். பாக்கிப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து உற்சாகத்துடன் செயல்படுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கு நிறைவேறி நன்மதிப்பு, சலுகைளைப் பெற்றுத்தரும். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். வீட்டுச்செலவுக்கு தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். புத்திரர்களின் படிப்பு திறமை வளர்வது கண்டு மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணிகளை முடிப்பர். அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர்.

மாணவர்கள்: தடைபட்டிருந்த உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புண்டாகும். கல்விக்கடன், அரசாங்க உதவியோடு படிப்பைத் தொடர்வீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து அதிக மார்க் பெறுவீர்கள். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தேவையான உதவி வழங்குவர். பெற்றோர் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக கருதி செயல்படுவீர்கள்.  படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவாளர்களின் கோரிக்கையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டு. எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. அரசியல் பணிக்கு புத்திரரின் உதவியும் கைகொடுக்கும். சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து தாராள லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

பரிகாரப் பாடல்:
கடிகமலம் சூழ்புவியில் மறையவராம்
வாதாவிக் கடிந்து மன்னாற்
படிக்கமல மறவடியார்க் கனம் படைத்தோர்
சீராளற் பயந்த நங்கை
பிடிக்கமலம் காதரிந்து சமைத்தகறி
வயிரவராம் பெருமாற்கீந்தே
அடிக்கமலம் குடிபெறுநற் பரஞ்சோதி
சிறுத்தொண்டர்க்கு அன்பு செய்வாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !