மனிதன் நல்ல லட்சியத்தோடு வாழ வேண்டும்... சுவாமி கவுதமானந்தர் பேச்சு
பெ.நா.பாளையம்: மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் நடந்த கூட்டத்தில் சுவாமி கவுதமானந்தர் பேசியதாவது: லட்சியம் இல்லாத மனித வாழ்க்கை, கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகை போன்றது. இந்த உலகில், உலகியல் இன்பம் மற்றும் ஆன்மிக இன்பம் என இரண்டு உள்ளது. இதில் பெரும்பாலான மனிதர்கள் உலகியல் இன்பங்களே பெரிது என நினைத்து வாழ்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் பூஜ்ஜியம். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது, அவற்றை நம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. அவற்றுடன் இறைவன், ஆன்மிகம் என்ற பக்தி உணர்வையும், நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழும் போதும், இந்த உலகத்தை விட்டு செல்லும்போதும், நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். எப்போதும் இறை நாமத்தை கூற வேண்டும், பிரார்த்திக்க வேண்டும்.இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து இறைவனை வணங்கி வந்தால், வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அதை தாண்டி செல்ல முடியும். தீய வழியில் செல்வம் சேர்த்த நபர்களின் மனதில் எப்பொழுதும் நிம்மதி இருக்காது. ஆனால், இறை வழியில் சென்று, நேர்மையான வழியில் பொருள்களை ஈட்டிய நபர் எப்பொழுதும் நிம்மதியாக இருப்பார். யாரைப் பார்க்கும் போது, நமக்கு இறைவனின் ஞாபகம் வருகிறதோ அந்த நபர் நல்ல நபர். அது போன்று நபர்களுடன் நாம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். சத்சங்கம் எனும் ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு, நல்ல எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுவாமி கவுதமானந்தர் பேசினார்.