குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4523 days ago
காஞ்சிபுரம்: குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வைகாசி விசாகப் பெருவிழா நடைபெறும். இவ்வாண்டு, வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த 15ம்தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை கண்ணாடி விமானமும், இரவு கேடய உற்சவமும் நடந்தன. நேற்று காலை 7:00 மணி அளவில், சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளினார். மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க, சுப்பிரமணிய சுவாமி நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இன்று காலை மான் வாகனமும், இரவு குதிரை வாகன உற்சவமும் நடைபெற உள்ளன.