கன்னியாகுமரியில் திருப்பதி பெருமாள் கோவில் பூமிபூஜை!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கன்னியாகுமரியில், பெருமாள் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், 5.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது; கோவில் கட்ட, 22.5 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் சன்னதிகளுடன் கோசாலை, வேதபாடசாலை, புஷ்கரணி, திருமண மண்டபம் போன்றவையும் கட்டப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. விழாவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர், செயல் அலுவலர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திரா துணை தலைவர் உட்பட, பலர் கலந்து கொண்டனர். பெருமாள் கோவில் அமைய உள்ள இடம், திருப்பதிபுரம் என, பெயரிடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.